மணவாளக்குறிச்சியில் சாலையை சீரமைக்க கோரி காங்கிரசார் மறியல் 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 105 பேர் கைது
மணவாளக்குறிச்சி– திங்கள்சந்தை சாலை பழுதடைந்து போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளதாகவும், இந்த சாலையை செப்பனிட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில் பழுதடைந்த சாலையை செப்பனிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நேற்று காலை 11 மணியளவில் மணவாளக்குறிச்சி பிள்ளையார் கோவில் சந்திப்பில் பிரின்ஸ் எம்.எல்.ஏ. தலைமையில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஆஸ்கர் பிரடி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் லாரன்ஸ், ரீத்தாபுரம் பேரூராட்சி தலைவர் மேரி ஸ்டெல்லா, கப்பியறை பேரூராட்சி தலைவர் டென்னீஸ் , வட்டார தலைவர் கிளாட்சன்,ஜெரால்டு கென்னடி, கிரைஸ்ட் ஜெனித், தனிஷ் உள்பட ஏராளமான காங்கிரசார் திரண்டனர்.
இதையொட்டி அந்த பகுதியில் குளச்சல் போலீஸ் துணைசூப்பிரண்டு வெங்கட்ராமன், மணவாளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தொடக்கத்தில் சாலையோரம் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் பின்னர், திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு அரசு பஸ் சிறைபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 105 பேரை கைது செய்தனர். இதில் 23 பேர் பெண்கள் ஆவார்கள். கைது செய்யப்பட்டவர்கள் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
Tags:
Manavai News