சவுதி அரேபியாவில் குமரி மாவட்ட தொழிலாளி ‘திடீர்’ சாவு: 5 மாதங்களுக்கு பிறகு உடல் சொந்த ஊர் வந்தது
31-08-2015
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி கிறிஸ்துநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னையா (வயது 39), தொழிலாளி. இவர் சவுதிஅரேபியாவில் உள்ள ஒரு கம்பெனியில் கிளீனிங் வேலை செய்து வந்தார். கடந்த ஏப்ரல் 4–ம் தேதி மாரடைப்பு காரணமாக அவர் இறந்து விட்டதாக ஆரல்வாய்மொழியில் உள்ள அவருடைய மனைவி பொன் பாக்கியதீபாவுக்கு (33) தகவல் கிடைத்தது.
அதைக்கேட்டு அவரும், அவருடைய மகன்கள் அபிஷேக் (12), அபினேஷ் (9) மற்றும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அதைத்தொடர்ந்து பொன்னையாவின் உடல் ஊருக்கு வரும் என உறவினர்கள் காத்திருந்தனர். ஆனால் உடல் மாதக்கணக்கில் ஆன பிறகும் வரவில்லை. இதனால் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் மற்றும் பச்சைமால் எம்.எல்.ஏ. உள்ளிட்டோரை சந்தித்து மனு அளித்தனர். மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு எல்லை பாதுகாப்புப்படை முன்னாள் வீரர்கள் நல சங்கம் மூலமும் மனு சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் சவுதி அரேபியாவில் இருந்து பொன்னையாவின் உடல் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் காலை சென்னை விமான நிலையத்துக்கு உடல் வந்தது. அங்கிருந்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் நேற்று காலை நெல்லைக்கு வந்து சேர்ந்தது. நெல்லையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் பகல் 10.15 மணிக்கு ஆரல்வாய்மொழி கிறிஸ்துநகரில் உள்ள வீட்டுக்கு உடலை எடுத்து வந்தனர்.
உடலைப் பார்த்ததும் மனைவி பொன் பாக்கியதீபா மற்றும் மகன்கள், உறவினர்கள் கதறி அழுதனர். அப்போது பொன் பாக்கியதீபா மயங்கி விழுந்தார். உடனே அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதைத்தொடர்ந்து பொன்னையா உடல் அங்குள்ள சி.எஸ்.ஐ. ஆலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஜெபம் நடத்தப்பட்டது. அதன்பின்னர் அருகில் உள்ள கல்லறை தோட்டத்தில் உடலை அடக்கம் செய்தனர்.
Tags:
District News