மணவாளக்குறிச்சி அரசு மகளிர் பள்ளியில் மாணவிகள் முற்றுகை போராட்டம்
07-11-2014
மணவாளக்குறிச்சியில் அமைந்துள்ள கடியப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 500 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதற்கிடையே புதிய தலைமை ஆசிரியர் பள்ளிக்கு பதவி ஏற்பதற்காக நேற்று வந்தார். இந்த தகவல் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் தெரியவந்தது. உடனே, மாணவிகள் அனைவரும் வகுப்பறையை புறக்கணித்து விட்டு தலைமை ஆசிரியர் அறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். இது குறித்து மாணவிகள் கூறும்போது, “ஏற்கனவே இருந்த தலைமை ஆசிரியரை மீண்டும் நியமிக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தனர். மாணவிகளின் முற்றுகை போராட்டத்தை பார்த்ததும் பதவி ஏற்பதற்காக வந்த தலைமை ஆசிரியர், பதவி ஏற்காமலேயே திரும்பிச்சென்று விட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:
Manavai News