மணவாளக்குறிச்சி அருகே வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்

மணவாளக்குறிச்சி அருகே வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்
27-06-2014
மணவாளக்குறிச்சி அருகே அழிக்கால் பகுதியில் நேற்று காலை முதல் கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. 15 அடி முதல் 20 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழுந்தன. திடீர் என்று அலைகளின் சீற்றம் அதிகமானதால் கடல் அரிப்பு தடுப்பு சுவரையும் தாண்டி அலைகள் சீறி பாய்ந்தன. இதனால் கடற்கரையை யொட்டிய பகுதியில் இருந்த வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது.
கடல் அலை தடுப்புசுவர் தாண்டி வரும் காட்சி
இதனால் அந்த வீடுகளில் இருந்த மக்கள் பயந்து போய் வீடுகளை விட்டு வெளியேறினார்கள். தொடர்ந்து அந்த பகுதியில் கடல் சீற்றமாக உள்ளது. இந்த நிலையில் கடல் நீர் வீடுகளுக்கு புகுந்ததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நாகர்கோவில்–குளச்சல் சாலையில் கல்லுகட்டி பகுதியில் சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அந்த வழியாக சென்ற பஸ்களையும் அவர்களை சிறைபிடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அழிக்கால் ஊருக்குள் புகுந்த கடல் நீர்
தங்கள் பகுதியில் தொடர்ந்து கடல் சீற்றமாக உள்ளதால் அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கை எடுத்து தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரி இந்த போராட்டம் நடந்தது. மறியலை தொடர்ந்து அந்த வழியாக போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. மேலும் கடியப்பட்டினம் பகுதியிலும் நேற்று கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் கடலோர பகுதியில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் அங்கிருந்து வெள்யேறி உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர். கடல் சீற்றம் ஏற்பட்டு உள்ள பகுதிகளில் மீன்வளத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
அழிக்கால் பகுதி மக்கள் சாலை மறியல் செய்த காட்சி

Post a Comment

Previous News Next News