இரணியல் அருகே கடையை உடைத்து நகை–பணம் கொள்ளை

இரணியல் அருகே கடையை உடைத்து நகை–பணம் கொள்ளை
19-05-2014
இரணியல் அருகே உள்ள முத்தலக்குறிச்சியை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 43). இவர் அந்த பகுதியில் பல சரக்கு கடை நடத்தி வருகிறார். மேலும் தனது கடையில் செல்போன்களுக்கு ரீசார்ஜ் செய்யும் பணியிலும் அவர் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் வியாபாரத்தை முடித்து விட்டு கடையை மூடிவிட்டு சென்று விட்டார். நேற்று காலை தனது கடையை திறக்க அவர் சென்றபோது அதிர்ச்சி காத்து இருந்தது. அவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதனால் அவர் கடைக்குள் சென்று பார்த்தார். அப்போது அங்கு இருந்த பணப்பெட்டி உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.4ஆயிரத்து 200 திருடப்பட்டு இருந்தது. மேலும் அவர் அடகு வைப்பதற்காக அங்கு வைத்திருந்த 3 பவுன் நகையும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதுபோக அவர் ஏற்கனவே ரூ.8 லட்சம் நகையை அடகு வைத்தற்கான ரசீதுகளும் மாயமாகி இருந்தது. நகை, பணத்தை கொள்ளையடித்தவர்கள் இந்த ரசீதத்தையும் திருடி சென்று உள்ளனர். மேலும் செல்போன் ரீசார்ஜ் செய்வதற்காக வைத்திருந்த 8 செல்போன்களும் திருடப்பட்டு இருந்தது.

இந்த துணிகர கொள்ளை பற்றி இரணியல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டவர்கள் பற்றி போலீசாருக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டு உள்ளதாகவும் அந்த கோணத்தில் கொள்ளையர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிகிறது. இந்த கடையின் அருகே முத்தலக்குறிச்சி ஊராட்சி தலைவர் சரோஜாவுக்கு சொந்தமான பெட்டிக்கடையும் உள்ளது. இந்த கடையிலும் கொள்ளையர்கள் புகுந்து உள்ளனர். ஆனால் அங்கிருந்த பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை. அவர் கடையில் பணம் வைக்காததால் அது தப்பியது.

அடுத்தடுத்து 2 கடைகளில் ஒரே இரவில் கொள்ளையர்கள் புகுந்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

Previous News Next News