கன்னியாகுமரி மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வரும் மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வரும் மழை
08-05-2014
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கோடை காலத்தை மிஞ்சும் அளவுக்கு வெயில் அடித்தது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு குமரி மாவட்டத்தின் சீதோஷ்ணம் திடீரென மாறியது. மாவட்டத்தின் மலையோர கிராமங்களில் சாரல் மழை பெய்யத் தொடங்கியது. அக்னி நட்சத்திரம் ஆரம்பித்த 4–ம் தேதி மழையின் உக்கிரம் அதிகரிக்க தொடங்கியது. உட்புற பகுதிகளிலும், கடலோர கிராமங்களிலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து எங்கும் குளிர் நிலவியது.

இந்த நிலையில் வங்கக் கடலில் கன்னியாகுமரி அருகே திடீரென உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இருதினங்களுக்கு முன்பு இரவு 8 மணிக்கு ஆரம்பித்த மழை நேற்று முழுவதும் நீடித்தது. நேற்று காலை வரை பல இடங்களிலும் விடிய விடிய கொட்டித் தீர்த்தது. தொடர்ந்து மதியம் முதல் இடை விடாது மழை பொழிந்தது. வழக்கமாக மழை பெய்யும் போது பலத்த காற்று வீசும். ஆனால் நேற்றும், நேற்று முன்தினமும் பெய்த மழை யின்போது, காற்று எதுவும் வேகமாக வீசவில்லை.
இதனால் மழை ஒரே சீராக பல இடங்களிலும் பெய்தது. இந்த மழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளிலும் உள்ள குளங்களில் வெள்ளம் பெருகியது. கால்வாய்களிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேற்கு மாவட்டத்தில் மலை கிராமங்களில் பெய்த பலத்த மழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அருவியில் குளிப்பதற்கு தண்ணீர் கொட்டவில்லை. ஆனால் கடந்த இரு நாட்களாக அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதால் யாரையும் குளிப்பதற்கு அனுமதிக்கவில்லை.

Post a Comment

Previous News Next News