முட்டம் கடலில் மூழ்கிய சிறுவனை காப்பாற்ற முயன்ற வாலிபர் சாவு – மூழ்கிய சிறுவனை தேடும்பணி தீவிரம்
01-04-2014
நெல்லை மாவட்டம் தென்காசி கே.ஆர்.நகர் சியோன் காலனியைச் சேர்ந்த 64 பேர் அப்பகுதி கிறிஸ்தவ ஆலய பங்கு தந்தை சுரேஷ் முத்துகுமார் தலைமையில், ஒரு பஸ்சில் நேற்று காலையில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். இங்கு பல்வேறு இடங்களை பார்த்த பின்பு அவர்கள் முட்டம் கடற்கரைக்கு சென்றனர். அங்கு இயற்கை எழிலை ரசித்தப்படி சுற்றி வந்தனர். சிலர் கடற்கரையில் இருந்த பாறைகளில் ஏறி இயற்கையின் அழகை படம் பிடித்தனர்.
அப்போது குழுவில் இருந்த நிர்மல் என்ற 12 வயது சிறுவன் கையில் காமிராவை வைத்து படம் எடுத்தப்படி ஒரு பாறையில் ஏறி நின்று, அங்கிருந்தபடி கரையில் இருந்த உறவினர்களை படம் பிடிக்க முயன்றான். அப்போது கடலில் திடீரென ராட்சத அலைகள் எழுந்து, பாறையில் நின்ற சிறுவன் நிர்மல் மீது மோதியது. இதில் சிறுவன் நிர்மல் நிலை தடுமாறி கடலுக்குள் விழுந்தான்.
இதைக்கண்ட உறவினர்கள் பதறினர். அவனை காப்பாற்ற முயன்றனர். அப்போது குழுவில் இருந்த ஆல்ட்ரின் (வயது 25) என்ற வாலிபர் கடலுக்குள் குதித்து நிர்மலை காப்பாற்ற முயற்சி செய்தார். அதற்குள் இன்னொரு அலை வேகமாக வந்து ஆல்ட்ரினையும் கடலுக்குள் இழுத்து சென்றது. இதைக் கண்டு சுற்றுலா வந்தவர்கள் அலறினர்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும் மீனவர்களும் ஓடி வந்தனர். அவர்கள் உடனடியாக கட்டுமரங்கள் மூலம் கடலுக்குள் சென்று அலை இழுத்து சென்ற ஆல்ட்ரினையும் சிறுவன் நிர்மலையும் தேடினர். இதில் ஆல்ட்ரின் மட்டும் மீனவர்கள் கண்ணில் சிக்கினார். அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்ததும் கரையில் இருந்தவர்கள் அவரை ஆம்புலன்சு மூலம் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஆல்ட்ரின் பரிதாபமாக இறந்து போனார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
மேலும் இதுபற்றி மணவாளக்குறிச்சி போலீசாருக்கும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மீட்பு படகு மற்றும் அதிநவீன ரோந்து படகுகளுடன் முட்டம் கடற்கரைக்கு விரைந்து வந்தனர். சிறுவன் நிர்மலை அலை இழுத்துச்சென்ற பகுதிகளில் தேடுதலில் ஈடுபட்டனர். இவர்களுடன் முட்டம் பகுதி மீனவர்களும் இணைந்து சிறுவனின் உடலை தேடி வருகிறார்கள்.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்