மணவாளக்குறிச்சி, பிள்ளையார்கோவில் பகுதியில் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைந்தது - சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு
23-04-2014
குழித்துறையில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள கடற்கரை கிராமங்களை இணைத்து குழித்துறை கூட்டுக்குடிநீர் திட்டம் சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இதற்காக சாலைகளின் நடுவே தோண்டப்பட்டு ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு முதல் இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வந்தது.
இதற்கிடையே அடிக்கடி சில பகுதிகளில் உடைப்பு ஏற்படுவதும், அதன்பின்னர் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் சாலைகள் உடைக்கப்படுவதால் அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக உள்ளது.
இந்நிலையில் நேற்று காலை 11.30 மணி அளவில் மணவாளக்குறிச்சி அருகே உள்ள பிள்ளையார் கோவில் சந்திப்பில் திடீரென்று குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதில் இருந்து வெளியேறிய தண்ணீர் 25 அடி உயரத்திற்கு பீறிட்டு எழுந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் தண்ணீர் சூழ்ந்தது.
அதுமட்டுமின்றி அருகில் உள்ள கடைகள், வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி நின்றதோடு, சாலையின் நடுவே மிகப்பெரிய பள்ளமும் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. எனவே, அந்த பகுதியில் வந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பின்னர் மாற்று வழியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.
இதுபற்றி குடிநீர் வாரியத்திற்கும், மின்சார வாரியத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மின்சப்ளையும், குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. எனவே, உடனடியாக குடிநீர் குழாய் உடைப்பையும், சாலையையும் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:
மணவை செய்திகள்