மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுமாப்பிள்ளை விபத்தில் பலி – உடன் சென்றவரும் பலி

மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுமாப்பிள்ளை விபத்தில் பலி – உடன் சென்றவரும் பலி
22-01-2014
மணவாளக்குறிச்சி அருகே உள்ள சேரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் டரக் ஜெங்கின்ஸ் (வயது 36). இவர் தி.மு.க பிரமுகர். தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகியாகவும் இருந்தார்.இவர் நெய்யூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் ஊழியராக பணிபுரிந்து உள்ளார்.

இவருக்கும் குலசேகரத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நாளை (23-ம் தேதி) திருமணம் நடக்க இருந்தது.திருமண அழைப்பிதழை புதுமாப்பிள்ளை டரக் ஜெங்கின்ஸ் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வழங்கி வந்தார்.

இந்நிலையில் நேற்று பூக்கடையில் உள்ள உறவினர் ஒருவருக்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு, அவரது சித்தப்பா ஏசு குமாரையும் (65) அழைத்து சென்றார்.டரக் ஜெங்கின்ஸ் ஹெல்மெட் அணிந்து இருந்தார்.மதியம் 12 மணியளவில் கோழிப்போர் சந்திப்பு பகுதிக்கு சென்றார். அப்போது குளச்சல் வாணியக்குடி பகுதியை சேர்ந்த அபின் (20) மற்றும் மணலிக்கரையை சேர்ந்த மனோ ஜக்சன் (19) ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.திடீரென டரக் ஜெங்கின்ஸ் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளும், அபின் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிளும் பயங்கரமாக மோதி கொண்டன.
இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். உடனே அப்பகுதியினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் டரக் ஜெங்கின்ஸ் மற்றும் அவரது சித்தப்பா இருவருக்கும் தலையில் பலத்த அடிபட்டதால் தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக இறந்தனர். அபின் தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். மனோவுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

விபத்தில் புதுமாப்பிள்ளை இறந்த தகவல் அறிந்த உறவினர்கள் கதறி அழுதனர். குலசேகரத்தில் உள்ள பெண் வீட்டாரும் மிகுந்த சோகத்தில் மூழ்கினர்.

Post a Comment

Previous News Next News