காட்டுப்பகுதியில் உடும்புகளை வேட்டியாடிய வாலிபர் கைது

காட்டுப்பகுதியில் உடும்புகளை வேட்டியாடிய வாலிபர் கைது
5 உடும்புகள் உயிருடன் மீட்பு
09-05-2013
பணகுடி அருகே குமரி மாவட்ட வனப்பகுதியான சேம்பார் வனச்சரக பகுதியில் சிலர் உடும்புகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வனவர் மாணிக்கவாசகம், வனக்காப்பாளர்கள் பிரபு, அசோக் மற்றும் ஊழியர்கள் சேம்பார் வனச்சரக பகுதிக்குள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 பேர் நாய்களைக் கொண்டு உடும்பு வேட்டையாடுவது தெரிய வந்தது. உடனே வனத்துறையினர் அவர்கள் 2 பேரையும் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அதற்குள் ஒரு வாலிபர் தான் வைத்திருந்த நாயுடன் ஓடிவிட்டார். மற்றொரு வாலிபர் பிடிபட்டார்.

பிடிபட்டவரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பணகுடி சாமியார் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த தென்கரை (வயது 28) என்பதும், தப்பி ஓடியவர் அதே பகுதியைச் சேர்ந்த ரீகன் (20) என்பதும் தெரிய வந்தது. இவர்கள் 2 பேரும் சேர்ந்த நாய்கள் மூலமாக வன விலங்குகளை வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து தென்கரையை வனத்துறையினர் கைது செய்து, அவர் ஒரு பெட்டியில் பிடித்து வைத்திருந்த 5 உடும்புகளையும் பறிமுதல் செய்தனர். அவற்றில் 2 உடும்புகள் பெரியவை. ஒரு உடும்பு நடுத்தரமானது. 2 உடும்புகள் சிறியது ஆகும். 5 உடும்புகளும் சேர்ந்து சுமார் 50 கிலோ எடை கொண்டவையாக இருந்தது. மேலும் தென்கரை தெரிவித்த தகவலின்பேரில் வனப்பகுதியைச் சுற்று அமைத்திருந்த வேலியின் அருகே நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள், உடும்புகளை வெட்டி விற்பனை செய்வதற்காக வைத்திருந்த வெட்டரிவாள், தராசு போன்றவற்றையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட தென்கரையையும், உயிருடன் மீட்கப்பட்ட உடும்புகள், பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்கள் ஆகியவற்றையும் நாகர்கோவில் வடசேரியில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். அதைத்தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள வனத்துறை கோர்ட்டில் தென்கரை ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
Thanks To Dailythanthi

Post a Comment

Previous News Next News