போலி ரேஷன் கார்டுகள் பற்றி தகவல் சொன்னால் ரூ.250 பரிசு: குமரி. கலெக்டர் அறிவிப்பு

போலி ரேஷன் கார்டுகள் பற்றி தகவல் சொன்னால் ரூ.250 பரிசு: 
குமரி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
03-02-2013
தமிழக அரசு நடைமுறையில் உள்ள ரேஷன் கார்டுகளின் புழக்கத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து உத்தரவிட்டது. அதன்படி ரேஷன் கார்டுகளில் உள் தாள் இணைக்கப்பட்டு புதுப்பிக்கும் பணி அந்தந்த ரேஷன் கடைகளில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் பயன்படுத்துவதை தடுக்கும் பொருட்டு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் பயன்படுத்துவது பற்றியும், போலி ரேஷன் கார்டுகள் பற்றியும் தகவல் கொடுப்போருக்கு ரூ.250 ரொக்கப்பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி குமரி மாவட்ட கலெக்டர் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- பொது வினியோக திட்டத்தின் கீழ் தற்போது நடைமுறையில் உள்ள ரேஷன் கார்டுகளின் செல்லுபடியாகும் காலம் 31.12.2013 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உள்தாள் இணைப்பு பணி நடந்து வருகிறது.
ரேஷன் கடைகளில் உள்தாள் இணைக்க வரும் ரேஷன் கார்டுதாரர்களில் ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டுகள் வர வாய்ப்புள்ளது. இவை குறித்தும், போலி கார்டுகள் குறித்தும் தகவல் கொடுப்பவர் மற்றும் கடை ஊழியருக்கு ரூ.250 அரசு உத்தரவுப்படி வழங்கப்படும் என பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Post a Comment

Previous News Next News