மணவாளக்குறிச்சி பகுதியில் குண்டும் குழியுமான சாலை
09-12-2012
நாகர்கோவிலில் இருந்து குளச்சல் செல்லும் மேற்கு கடற்கரை சாலையில், நாகர்கோவிலில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள முக்கிய ஊர் மணவாளக்குறிச்சி. இங்கு மத்திய அரசின் இந்திய அரிய மணல் ஆலை, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள், மின்சார வாரியம் உள்பட பல முக்கியமானவற்றை உள்ளடக்கிய ஊராகும்.
குழிக்குள் மண் நிரப்பப்பட்டு மரகிளைகள் நட்டு வைக்கப்பட்டுள்ள காட்சி |
மணவாளக்குறிச்சி மெயின் சாலை வழியே தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. பக்கத்து ஊர்களை சார்ந்த பொதுமக்கள், தங்களுடைய அன்றாட தேவைக்கு பொருட்களை வாங்க மணவாளக்குறிச்சி வருகின்றனர்.
இந்நிலையில், மணவாளக்குறிச்சி சந்திப்பு அருகே உள்ள சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. சில நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தட்டுத்தடுமாறி செல்வதுடன், சாலையில் ஏற்பட்டுள்ள குழுக்குள் விழும் சூழ்நிலை ஏற்படுகிறது.
மழை காலங்களில் அதிக அளவு தண்ணீர் தேங்குவதால், மேடான பகுதி எது, பள்ளம் எது என தெரியாமல் வாகனங்களில் வருபவர்கள் இன்னல்படுவதை காணமுடிகிறது.
மணவாளக்குறிச்சி பழைய ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் முன்பகுதியில் உள்ள ரோட்டில் பெரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டிருந்தது. கடந்த சில நாட்களாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் இதில் விழுந்து செல்லும் காட்சியை காணமுடிந்தது. தற்போது, அந்த குழியை மண் கொண்டு நிரப்பி அதன் மேல் சிறு மரக்கிளைகளை நட்டு வாகனங்களை எச்சரிக்கின்றனர்.
வேகமாக வரும் சிலர் அந்த குழியின் மேல் நிரப்பப்பட்ட மண் மேடு மீது ஏறி நிலை தடுமாறி செல்கின்ற காட்சியும் நடப்பதை காணமுடிகிறது. எனவே மணவாளக்குறிச்சி மெயின் சாலையை சீர் செய்தால் நன்றாக இருக்கும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
Tags:
மணவை செய்திகள்