மணவாளக்குறிச்சி அருகே கார் மோதி 4 மாணவிகள் படுகாயம்: மறியலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு
16-04-2015
மணவாளக்குறிச்சி அருகே உள்ள கூட்டுமங்கலம் பகுதியை சேர்ந்த அபிஷா (வயது 14), தர்ஷனா (14), பரப்பற்றை சேர்ந்த ஜெயசந்தியா (14) ஆகிய மூவரும் மணவாளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். பரப்பற்று, மணக்காட்டுவிளை பகுதியை சேர்ந்த நாகராஜன் மகள் திவ்யா (12) 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் 4 பேரும் பள்ளிக்கு தேர்வு எழுத செல்வதற்காக கூட்டுமங்கலம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து இருந்தனர்.
அப்போது குளச்சல் சாஸ்தான்கரையை சேர்ந்த சதீஷ் குமார் (57) என்பவர் கார் ரோட்டில் தாறுமாறாக ஓடி நிழற்குடைக்குள் புகுந்தது. அப்போது அங்கு அமர்ந்திருந்த அபிஷா, தர்ஷனா, ஜெயசந்தியா, திவ்யா ஆகிய 4 பேர் மீதும் கார் மோதியது. இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர்.சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து பற்றி அறிந்ததும் ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடினர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் குளச்சல் ஏஎஸ்பி கங்காதரன் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். படுகாயம் அடைந்த மாணவிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும், அவர்களின் மருத்துவ செலவுகளை ஏற்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக மாணவிகள் மீது மோதிய காரை ஓட்டிவந்த சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். கிராம நிர்வாக அதிகாரி தாரணி மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணி மாவட்ட தலைவர் மிசா சோமன், மண்டைக்காடு பேரூராட்சி தலைவி மகேஸ்வரி முருகேசன், மணவாளக்குறிச்சி பேரூராட்சி தலைவி ஜோஸ்பின் ரீட்டா மற்றும் 120 பெண்கள் உள்பட 200 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்ததாக தெரிகிறது.
Tags:
Manavai News